Friday, February 24, 2012
Saturday, February 11, 2012
கூடங்குளம் அணுஉலை - அழிவின் விளிம்பில் மக்கள் -- நிர்மலா கொற்றவை
கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டம் – அழிவின் விளிம்பில் கூடங்குளம் மக்கள், (தமிழக கேரள மீனவர்கள் உட்பட) தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த விளம்புநிலை மக்கள் தன்னம்பிக்கையின் பிரதியாகவே எனக்கு காட்சியளிக்கின்றனர். 127 பேர் காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய பின்னர் இந்த பிரச்சனை பெரும் கவனம் பெற்றிருப்பினும் இது இருபது வருட காலத்திற்கும் மேற்பட்ட போராட்டம் என்பதை நாம் அறிவோம். அணு உலையினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், ஏற்படவிருக்கும் பாதிப்பு குறித்தும் எண்ணற்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உலகெங்கும் தகவல்கள் பரவிக் கிடக்கின்றன. ஆகையால் அணு உலையின் பாதிப்பு குறித்து நான் பேசுவதைத் தாண்டி அம்மக்கள் அழிவின் விளிம்பில் தள்ளப்படுவதையும், அவமதிக்கப்படுவதையும் கண்டித்துப் பேசுவதை அவசியம் என்று கருதுகிறேன்.
படைப்பாற்றல் மிக்க எழுத்துக்களை நான் எழுதுவதில்லை, ஒரு எழுத்தாளர் என்ற அடிப்படையிலும் நான் இங்கு பேசவரவில்லை. இதை நான் சொல்லக் காரணம் உள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் களத்தில் நின்று அதிகாரத்திற்கெதிராக உறுதிப்பாட்டோடு அறவழியில் போராடி வருகிறார்கள், தன்னப்பிக்கையும், அறவுணர்வும் இம்மக்களை வழிநடத்துகிறது. சுப உதயகுமாரன், புஷ்பராயன் ஆகியோர் அம்மக்களுக்கு எத்தகைய அறிவியல் அறிவூட்டத்தை செய்திருக்கிறார்கள் என்பது கவனத்திற்குறியது. பாராட்டுக்கும் உறியது. அதேபோல் சமூக ஆர்வலர்கள் களப்பணிகளை செய்து பல்வேறு தகவல்களை அணு உலையின் பாதிப்புகள் குறித்தும், கூடங்குளம் மக்களின் உறுதிப்பாடு குறித்தும் எழுதி வந்திருக்கின்றனர். நான் வெறும் பார்வையாளராக இருந்து அவற்றை கவனித்து மட்டுமே வந்திருகிறேன். கிடைக்கபெற்ற தகவல்களை வைத்து நான் படைப்பாளர்கள் அரங்கில் பேசுவதென்பது எனக்கு ஒரு குற்ற உணர்வை எழுப்புகிறது.... ஆனால் அம்மக்களின் போராட்டத்தில் நியாயம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வதற்கான ஒரு வாய்ப்பாய் இதை நான் பயன்படுத்திக்கொள்கிறேன். அத்தோடு அம்மக்களையும், அப்போராட்டக் குழுவினரையும் கொச்சை படுத்தும் தினமலர் பத்திரிகையின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன். ’பார்ப்பன இந்துத்துவ’ பத்திரிகையின் பார்வை இப்படி இருக்கிறதென்றால், மதச்சார்பற்ற மத்திய அரசு போராட்டம் நடத்துவதற்கு அந்நிய சக்திகள் உதவுகின்றன என்று கூறி ‘ரெயிடுகளை’ நடத்துகிறது, பரம எதிரிகளாக இருந்தாலும் பரவாயில்லை எப்படியாவது கூடங்குளம் மக்களின் போராட்டத்திற்கு களங்கம் கற்பித்தே தீருவோம் என்று இவ்விசயத்தில் பாஜாகவுடன் சேர்ந்து கொண்டு மதச்சாயம் பூசுகிறது. ஜனநாயகத்திற்கும், அறவழிப்போராட்டத்திற்கும் இதை விட ஒரு பெரும் அவமதிப்பை நிகழ்த்திவிட முடியாது. அச்செயலை ஏவிவிட்ட மத்திய அரசும், அவர்களின் சேவகர்களும் தங்கள் அதிகார அங்கியை சிறிது நேரம் கழற்றி வைத்துவிட்டு, மனசாட்சிக்குட்பட்டு அவர்களது இச்செயலை சுயவிமர்சனம் செய்து பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
போராட்டக் குழுவினருக்கு பலவகைகளில் நெருக்கடி கொடுத்துள்ளனர், தாங்கள் கட்டவிழ்த்துவிட்ட பொய்க்கு ஆதாரம் சேர்க்கும் பதட்டத்தில் அங்கு சுற்று வட்டாரத்தில் உள்ள கிறித்தவ என் ஜி ஓக்களிடம் நடத்தப்பட்ட சோதனையின் போது கணக்கில் 2 ரூபாய் குறைகிறது என்று 1.ரூபாய் வட்டியும், 24 ரூபாய் குறைகிறது என்று 11 ரூபாய் வட்டியும் கட்டச்சொன்னதும், தூத்துக்குடி தேவாலயத்தின் பிஷப் யுவனுக்கு நோட்டீஸ் அணுப்பியதையும் என்னவென்று சொல்வது. ’இந்துத்துவ’ பிடிப்பு எதெற்கெல்லாம் துணை நிற்கிறது பாருங்கள்.
People’s Movement Against Nuclear Energy, அணு சக்திக்கெதிரான மக்கள் இயக்கம் எனும் அமைப்பினர் வெளிப்படையாகவே செயல்படுகின்றனர், கணக்குகளை காட்டி வருகின்றனர். 300 பெண்கள் வரை தினமும் காலை முதல் மதியம் 6 மணி வரை போராட்ட கூரையின் கீழ் ஒன்று கூடி உண்ணாவிரதம் கடைபிடிக்கின்றனர். இடிந்தகரை மீனவர்கள் புதன்கிழமைகளில் நடக்கும் மீன் விற்பனையிலிருந்து 10% உதவித் தொகையாக அளித்துவருகின்றனர், மற்றபடி இயக்கங்கள் சில நன்கொடைகள் தருகின்றன. மாணவர்கள் கிராமங்களில் சென்று நன்கொடை வசூலிக்கின்றனர். போராட்ட அமர்வுக்காக கீற்று அமைக்க இடிந்தகரை மீனவக் கிராமத்திலும் , கூடங்குளம் மக்களிடமும் ஒவ்வொரு குடும்ப்பத்தினர் விகிதம் தலா 200 ரூபாய் வசூலிக்கப்பட்டது, அங்குள்ள முருகன் கோயில் மற்றும் சர்ச்சுகளுக்கு சொந்தமான ஒலி பெருக்கிகளை அவர்கள் பயன்படுத்துகிறார்கள் , ஆண்கள் வேலைக்கு செல்கிறார்கள், பெண்கள் போராட்டக் கூரையின் கீழ் ஒன்றிணைந்து அமர்கிறார்கள். இதில் என்ன பெரிய சமூக விரோதப் போக்கிருக்கிறது, சதி இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.
கூடங்குளம் மக்களின் அறவழிப் போராட்டத்தை குலைக்க, வன்முறையை தூண்டி விட பல்வேறு முயற்சிகளை செய்து பார்த்தது இந்து முன்னணி. காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரும் அதில் பங்கு கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் சில நாட்களுக்கு முன் பேசிய இந்து முன்னணி இளங்கோவன் அர்த்தமற்ற, ஆதாரமற்ற வாதங்களை வைத்தார். பெண்களால் தான் அங்கு பிரச்சனை வலுத்தது என்று பொருள் படும் வகையில் பேசினார். பெண்களின் பங்களிப்பே இப்போராட்டத்தின் பலம்.....அப்பெண்களின் உறுதிப்பாடு சமூக மேம்பாட்டிற்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கும் ஒன்றாக இருக்கிறது. பெண்கள் சமூகப் பங்களிப்பு செய்வதையும், போராடுவதையும், பெண்களை இணைத்துக் கொண்டு போராடும் சமத்துவ அமைப்புகளையும் மதவாதிகளால், முதலாளித்துவத்திற்கு துணை நிற்கும் அரசு அமைப்புகளால் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம் இவர்களின் இந்த ‘சிறுபிள்ளைத்தனமான, கோழைத்தனமான’ பேச்சு. இத்தருணத்தில் எனக்கொரு கேள்வி எழுகிறது, இந்துத்துவ மடங்கள் எங்கிருந்து பணம் பெருகின்றன? வெளிநாட்டு வாழ் 'இந்து' இந்தியர்களிடம் பெற்ற நன்கொடைகள் அணைத்தும் நேர்மையான முறையில் ஈட்டப்பட்ட பணம் தானா? கிறத்தவர்களிடம் பணம் பெறுவதே இல்லையா....தங்கள் சொத்துக்களையெல்லாம் எழுதித் தந்து விட்டு இந்து' ஆன்மீக மடங்களில் இணைந்த வெள்ளைக்காரர்கள் யாரும் கிறித்தவர்கள் இல்லையோ???
இப்போராட்டத்தை ஒடுக்க நிணைக்கும் அதிகார வர்க்கத்தினரிடம் மற்றொரு கூடுதல் தகவலையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கூடங்குளம், இடிந்தகரை மற்றும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் சுற்றுவட்டார மக்கள் ‘மடமை’யிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள், சரியான முறையில் அரசியல் படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அறிவியல் அறிவு ஊட்டப்பட்டிருக்கிறது, அதனால் அவர்கள் தங்கள் முழு அறிவோடும், சுயநிணைவோடுமே PMANE யுடன் துணை நிற்கிறார்கள். மத்திய அரசு வல்லுனர் குழுவின் அறிவுப் பின்புலத்தையும், கடலறிப்பு பற்றிய அறியாமை குறித்தும், அவர்கள் புறக்கணிக்கும் நிலவியல் ஆயுவ்கள் குறித்தும் நமக்கு பல்வேறு ஆய்வுத்தகவல்கள் கிட்டியுள்ளன. மத்திய அரசு அமைத்த வல்லுனர் குழு அறிந்திராத பல தகவல்களை அப் பெண்கள் அறிந்து வைத்திருப்பார்கள் என்பதை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பெண்களை முறையாக அரசியல்மயப் படுத்தி, அறிவூட்டி அவர்களை இணைத்துப் போராடும் போராட்டக் குழுவினரை, அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அவர்களது கணவன்மார்கள், குடும்பதார் ஆகியோரை பாராட்டாமல் இருக்க முடியாது.
1988ல் சோவியத் அதிபர் மிக்கைல் கார்ப்பச்சேவ் மற்றும் அப்போதையப் பிரதமர் ராஜீவ் காந்தி கூடங்குளத்தில் அணுசக்தி உற்பித்திக்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்ட காலம் தொடங்கி எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வந்திருக்கின்றன. பேச்சிப்பாரை நீரமைப்பிலிருந்து நீர் எடுக்கப்படும், கழிவு நீர் கடலில் கலக்கப்படும் எனும் அறிவிப்பை ஒட்டி 1989லேயே 10,000 மக்கள் தேசிய மீனவர் தொழிலாளர் சங்கம் (National Fish workers union) எனும் அமைப்பின் கீழ் ஒன்றுகூடி போராடினர். அப்போது பெரும் கலவரங்கள் நடந்தது. இந்த 20 வருட எதிர்ப்பின் பின்னணியில் மத்திய அரசு பல விசயங்களை மூடி மறைக்கிறது. முதலீட்டியத்தைப் பெருக்கிக் கொள்ளவும், உலகமயமாக்கல் சூழலில் பொருளாதார வளர்ச்சி 8 – 9% என்று பெருமை பாடுவதற்குமான இது போன்ற திட்டங்களில் வழக்கமாக சொல்லப்படும் வேலை வாய்ப்பு, மேம்பட்ட வாழ்க்கை முறை, வாழ்வாதார உயர்வு ஆகியவை நடைமுறைப்படுத்தப்படாமல் விளிம்புநிலை மக்கள், பழங்குடியினர் வாழ்வும், கிராமப்புரங்களும் சிதைவுறுவதைப் போலவே, கூடங்குளத்திலும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. தொழிலதிபர் சிலருக்கு தெருவிளக்கு பொருத்துவது, உலைக்கூடத்திற்கு நடைபாதை போடுவது போன்ற ஒப்பந்த வேலைகள் கிடைத்தன. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அணைத்தும் பொய்யான கதைகள் என்பதை அறிந்த அம்மக்கள் 2001ல் அணுசக்திக்கெதிரான மக்கள் அமைப்பின் கீழ் ஒன்றிணைந்தனர் என்பதை இங்கு நாம் நிணைவில் கொள்ள வேண்டியுள்ளது. அரச விஞ்ஞானிகள், அப்துல் கலாம், ஆட்சியாளர்கள், இந்து முன்னணி, தினமலர் இவர்களின் ‘சுயநல’வாத பேச்சுக்களை பொது மக்கள் புறந்தள்ள வேண்டும்.
இங்கு மக்களுக்கு புத்தியுறைக்கும் அரச விஞ்ஞானிகளும் அரச அறிஞர்களும் கல்வி என்ற ஒன்றை எந்த பதத்தில் அழைக்கின்றனர் என்று தெரியவில்லை. ஆனாலொன்ரை உறுதியாகச் சொல்லமுடியும். அது அரசிற்கு சேவை செய்யும் ஒரு அடிமையின் மூளையை குறிவைக்கும் ஒரு பொறி அவ்வளவே. ஒவ்வொரு அரசும் கல்வியை மக்களின் சொத்தென்றழைக்கிறது. அரசு தன் அதிகாரத்தை, அதிகாரம் எனும் அந்த சொத்தை பாதுக்காகவே கல்வியை ஒரு ஆயுதமாக கொள்கிறது. அதன் பார்வையில் கல்வி என்பது அரசுக்கு சேவகம் செய்யும் ஒரு அமைப்பே தவிர கல்வி என்ற பரந்து பட்ட அர்த்தத் தளத்தில் அது இல்லை. அரசின் விதிக்கப்பட்ட வரைமுறைகளைக் கொண்ட கல்வி என்ற ஒன்றை கற்ற அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் ஊழலில் திளைப்பதும், அராஜகத்திற்கு உறுதுணையாகவும் இருப்பதைப் பார்க்கும் பொழுது இக்கல்வி முறையில் எனக்கு சந்தேகம் வருகிறது. கல்வி என்பது வெறும் மூளைச் செயல் பாட்டோடு ஒரு வெற்று உறுப்பைப் (appendicitis) போல் துருத்திக்கொண்டு இருக்கிறது. பண்பையும், சமத்துவத்தையும், மேலும் தானும் சமூகத்தில் எளிய மனிதர்களைப் போல் ஒரு மனிதன் என்ற ஒரு புரிதலை, அரசு சார் கல்வி வழங்குவதேயில்லை. மக்கள் தாங்கள் சார்ந்த நலன் ஒன்றை, அதன் அணுபவத்தை, அழிவிலிருந்து மீள்வதை முன் வைத்தால் இவ்வரசும், அரசு சார் அறிஞர்களும் அவர்களுக்கு புரியுமாறு சொல்லுங்கள் என்று கூவுகிறது. இதே அறிஞர்கள்தான் கையூட்டை பல வழிகளிலும் வாங்குகிறார்கள். இது ஏன். அரசு வழங்கும் கல்வி என்பது ஒரு பெரும் ஒடுக்குமுறை. கல்விக்கூடங்கள் என்பது அதிகாரத்திற்கு சேவகம் செய்யும் அடிமைகளை உருவாக்கும் ஒரு கூடம்.... அவ்வளவே... சமூக மேம்பாட்டிற்கான, சமத்துவத்தை வலியுறுத்தும் மாற்று அறிவைத் தேடிக் கற்றவர்கள், மக்கள் மத்தியில் அதைப் பரப்புரை செய்பவர்கள் 'துரோகிகள்'.
அணு உலைகளால் ஆபத்து இல்லையென்றால் ஏன் பல்வேறு நாடுகள் அவ்வுலைகளை முடிவருகின்றன? நம் நாட்டில் கூட மேற்குவங்கத்தில் ஹரிபூரில் இருந்த அணு உலை ஏன் மூடப்பட்டது. இப்போதுவரை மேற்கு வங்கத்தில் அணு உலைகள் கூடாது எனும் நிலைப்பாட்டைத்தான் மம்தா பேனர்ஜி கொண்டுள்ளார். தமிழகத்தின் இப்போதைய முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களும் கூடங்குளத்தில் மக்களின் அச்சம் போக்கப்படும் வரை அணுமின் நிலையத்தின் பணிகளை முடக்கி வைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றியிருக்கிறார். ‘அரசியல்’ விளையாட்டுகளுக்கும், இந்துத்துவ வெறிக்கும், அந்நிய முதலீட்டியத்தின் பெருக்கத்திற்கும், போட்டுவிட்ட ஒப்பந்தங்களுக்காகவும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வும், வாழ்வாதாரமும் குலைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. போராட்டக்குழுவினரின் மீது அவதூறுகள் சுமத்துவது, அதற்கு மதச்சாயம் பூசுவது, அறவழிப் போராட்டத்தினை ஒடுக்கி வன்முறையை தூண்டும் முயற்சிகள் ஆகியவை கண்டனத்துக்குறியவை. விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை மேம்பாட்டில், சுற்றுச் சூழல் மாசுக்கட்டுப்பாட்டில் அக்கறையுடைவர்களாக அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்திற்கும், அம்மக்களுக்கும் நானும் எனது ஆதரவை பதிவு செய்கிறேன்.
இயற்கைவிரோத திட்டங்களை அறிவிக்கும் அரசு, தங்களுக்கு தோன்றும்போது மட்டும் அரசை விமர்சிக்கும் எதிர்கட்சிகள், அவர்களின் எல்லா பரப்புரைகளையும் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளும் அரசு அதிகாரிகள், சேவகர்கள் அணைவரும் நேர்மையானவர்கள், சந்தேகத்திற்கப்பார்பட்டவர்கள், ஆனால் வாழ்வாதாரம் பரிபோகிறது, இத்திட்டம் இயற்கையை, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஒன்று, உயிர்கொல்லி திட்டம் என்பதை அறிவியல் பூர்வமான தரவுகளை வைத்து அறவழியில் போராடும் மக்கள் சமூக விரோதிகள், துரோகிகள்...மெய்சிலிர்க்கிறது எனக்கு. வாழ்க ஜனநாயகம்! இனியாவது பொதுமக்கள் யார் ‘சமூக விரோதிகள்’ என்பதை சரியாக அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொண்டு
இக்கூட்டட்தை ஒருங்கிணைத்த அணுசக்திக்கெதிரான படைப்பாளிகள் இயக்கம், savetamils.org மற்றும் எனுக்கு அழைப்புவிடுத்த சந்திரா தங்கராஜ் ஆகியோருக்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன்.. நன்றி வணக்கம்....
(4.2.2012 அன்று சென்னை லயோலா கல்லூரியில், அணு உலைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசியது)
Subscribe to:
Posts (Atom)