Sunday, February 23, 2014

அமெரிக்காவின் தரகர்கள்யார்? - மணக்காடு செயச்சந்திரன்

அமெரிக்காவின் தரகர்கள்யார்?
                     - மணக்காடு செயச்சந்திரன்                                                         (நாளைவிடியும்   சூலை - திசம்பர் 2013 இதழில் இடம்பெற்ற கட்டுரை)
                                                                                                                                                      கூடங்குளம் அணு உலை ஆபத்தானவையா? எதிர்ப்பின் பின்னணியில் அன்னிய சக்திகளா? உண்மை நிலை என்ன?
    கூடங்குளம் மட்டுமல்ல பொதுவாக அணுஉலை என்பதே ஆபத்தானவைகள்தான். இதை அறிந்துகொள்ள விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடத்தில் படித்தவராகவோ அணுவிஞ்ஞானியாகவோ இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.  சாதாரண அறிவே போதும். இரசியாவில் செர்னோபிலில் நடந்த அணு உலை விபத்துகளும் போபாலில் ஏற்பட்ட விசவாயுக் கசிவும் அதன் விளைவாக மனித இனம் கண்ட அழிவுகளும்,  இன்னும் ஆறாத வடுக்களாய்த் தொடரும் கொடிய நோய்களும் நம் கண்முன்னே காட்சிகளாக நிற்கும் சாட்சிகள்.  அணு உலை விபத்து ஏற்பட்டுத்தான் பாதிப்பு ஏற்பட வேண்டுமென்று அவசியமில்லை. அணு உலைக் கூடத்திலிருந்து தினசரி வெளியாகும் அணுக்கதிர் வீச்சுகளே மனித இனத்தைக்  கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லவும் கொடிய நோய்களைப் பரப்பவும் போதுமான விசயமாகும். இது குறித்த சமூக ஆர்வலர்கள் பலர் மிக விரிவாகவும் தெளிவாகவும் கட்டுரைகளை  எழுதியிருக்கிறார்கள்.
எதிர்ப்பின் பின்னணியில் அன்னிய சக்திகள்
     இந்த உதயகுமார் யார்? போராட்டக்காரர்கள் 25 ஆண்டுகாலம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? நாட்டின் வளர்ச்சிக்குத்  தடையாக இருப்பவர்கள் என்று ஆளும் முதலாளித்துவ ஏகாதிபத்திய எதேச்சதிகார காங்கிரசு தலைமையிலான அரசும் அவர்களின் ஏவல்களும் காவிப்படைகளும் நாளேடுகளிலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் நாளும் ஒரு செய்தியைப்  பரப்புரை செய்து கொண்டு இருக்கின்றார்கள் ‡உண்மை நிலை என்ன?
 யார் இந்த காங்கிரசு?
    1950 களில் அண்ணா காங்கிரசுக்கு எதிராக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தபோது அதைப்  பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரசு அவரை மக்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக அவரைப்பார்த்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவாளி என்று சொன்னவர்கள் தான் இந்த காங்கிரசுக்காரர்கள். அவர்களுக்கு வெண்சாமரம் வீசினால்  அவர்கள் தியாகிகள் ; அவர்களை எதிர்த்து மக்களிடம் உண்மையை எடுத்துச் சொன்னால் அவர்கள் அமெரிக்க உளவாளிகளா? போபாலில் அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனத்தில் விசவாயுக் கசிவு ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டபோது அந்த  நிறுவனத்தின் தலைவரான அமெரிக்க ஆண்டர்சனை கைது செய்யாமல் அமெரிக்கா கோபித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தவர்கள்தான் இந்த                                                                                                  
காங்கிரசு வீராதி வீரர்கள். இவர்கள் சொல்கிறார்கள் உதயகுமாரையும் போராட்டக்காரர்களையும் பார்த்து அமெரிக்காவிலிருந்து டாலர் வருகிறது. அய்ரோப்பாவிலிருந்து யூரோ வருகிறது என்று. ஏன் ஆட்சி அதிகாரம் ஆள் அம்பு சேனைகளைத்  தன்கையில் வைத்திருக்கும் இவர்களால் அமெரிக்காவிலிருந்து வரும் அந்தப் பணத்தைத் தடுத்து  நிறுத்த முடியாதா? போராட்டக்காரர்களுக்கு அமெரிக்காவிலிருந்து  பணம் வருகிறது என்றால் அணு உலையை ஆதரிப்பவர்களுக்கு இரசியாவிலிருந்து பணம் வருகிறதா?
யார் அமெரிக்காவின் கைத்தடி?
    அமெரிக்க - இந்திய அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக இரண்டு மாத காலம் இந்தியப் பாராளுமன்றத்தைப் போர்க்களமாக மாற்றியது யார்? இந்தக் காங்கிரசுக்காரர்களா? உதயகுமாரா? இடது சாரிகளின் எதிர்ப்பையும் மீறி ஆட்சியைப் பலி கொடுத்தாலும் பரவாயில்லை என்று அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்து கொண்டது யார்? இந்தக் காங்கிரசுக்காரர்களா? உதயகுமாரா? அமெரிக்கவுடன்  ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு காங்கிரசுக்குக்  கொடுத்து வந்த ஆதரவை இடது சாரிகள் விலக்கிக்கொண்டபோது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வ தற்காக மற்றகட்சி எம்.பிக்களை விலைக்கு வாங்குவதற்கு அமெரிக்க டாலர்களை லஞ்சமாக கோடிகோடியாக கொட்டியது யார்? இந்தக் காங்கிரசுக்காரர்களா உதயகுமாரா? கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவரை விலை கொடுத்து வாங்கி, தோற்றதாக அறிவித்து தோற்றுப்போன சிவகங்கைச் சீமான் சிதம்பரத்தை வெற்றி பெற்றதாக அறிவித்ததோடு மந்திரி பதவியும் கொடுத்தது யார்?  இது ஒன்று போதாதா?  இந்தக் காங்கிரசுக்காரர்கள் எப்படிப்பட்ட பொய்யர்கள்; பித்தலாட்டக்காரர்கள்; சூழ்ச்சிக்காரர்கள் என்று தெரிந்து கொள்க.
     விபத்து நடப்பது இயல்புதானே. அதற்காக விமானத்தில்  பயணிக்காமல் இருக்க முடியுமா? இரயிலில் பேருந்தில் பயணிக்காமல் இருக்க முடியுமா? என்று நாராயணசாமி கேட்கிறாரே? நான் கேட்கிறேன் அந்த நாராயணசாமியைப் பார்த்து.... விமானத்தில் எஞ்சின் கோளாறு.. பறக்கும் போது நடுவானில் எஞ்சின் தீ பிடித்து எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறலாம்.. ஆனாலும் ஏறுபவர்கள் ஏறிக் கொள்ளுங்கள் என்றால் விபத்து நடப்பது இயல்புதானே என்று இந்த நாராயணசாமி ஏறுவாரா?
    வளர்ச்சிக்குத் தடையாக  இருக்கும் உதயகுமாரையும் போராட்டக்காரர்களையும் கைது செய்ய வேண்டும் என்று சொல்கிறார்               களே; யார் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவர்கள்? டாட்டாக்களும், பிர்லாக்களும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானவரி செலுத்த வேண்டியிருக்கிறதே; அந்தப் பணமும் இந்த நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டிய பணம்தானே? அவர்களிடம் இவர்கள் கறாராக வசூலிக்க முடியுமா? அவர்கள் மீது வரி ஏய்ப்பு வழக்குப் போடமுயுமா?
வளர்ச்சி வளர்ச்சி என்று இரத்தக் கண்ணீர் வடிக்கும் இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு சேது சமுத்திரத் திட்டம் தீட்டப்பட்டு பல கோடி ரூபாய் கடலில் கொட்டிசெலவழித்த பிறகு அங்கு இராமன் பாலம் இருக்கிறது;  சேது வாய்க்கால் தோண்டப்பட்டால்  அந்த ராமன் பாலம் உடைந்து விடும்  என்று இல்லாத ஒன்றை இருப்பதாக இட்டுக்கட்டி கற்பனைப் புராணக் கட்டுக் கதைகளை ஆதாரமாகக்  காட்டி அந்தத்   திட்டத்தை முடக்கிப்போட்டார்களே! அதற்குச் செலவுசெய்த பணம் வீண் இல்லையா? வளர்ச்சி வளர்ச்சி என்று வாய்க்கிழியப் பேசும் இவர்கள் அப்போது ஊமையாய்ப்  போனது  ஏன்? வளர்ச்சியை முடக்கு பவர் களைக் கைதுசெய்ய வேண்டுமென்று சொல்லத் திராணி யில்லாமல் போனது ஏன்? யார் வளர்ச்சி பற்றிப் பேசுவது? ஓராண்டுக்கு முன்பு மத்திய அரசின்  உணவுக்கிடங்குகளில்  பாதுகாக்க முடியாமல் வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டபோது எங்களுக்கு உத்தரவிடும் அதிகாரம் நீதி மன்றங்களுக்கு இல்லை என்று கூறி, எலியும் பெருச்சாலியும் உண்டு கொழுத்து  வீணாகப் போனாலும் பரவாயில்லை; நீதி மன்றங்கள் உத்தரவிட்டாலும் அதை பட்டினியில் கிடக்கும் ஏழைகளுக்குக்  கொடுக்க மாட்டோம் என்று சொன்னவர்கள்தான் இந்த வளர்ச்சி வீரர்கள்.
    இவர்கள் நியமித்துள்ள திட்டக் கமிசன் எந்த அடிப்படையில் வறுமைக் கோட்டுக்குக்  கீழ் உள்ளவர்களை அடையாளப்படுத்தியுள்ளது தெரியுமா? கிராமப்புறங்களில் தனிநபர்  வருமானம் நாள் ஒன்றுக்கு ரூ.11 எனவும், நகர்ப் புறங்களில் நாள் ஒன்றுக்கு ரூ.20 க்குக்  கீழும் வருமானம் பெறுபவர்கள்தான் வறுமைக்கோட்டுக்குக்   கீழ் உள்ளவர்களாம்.                                      இன்றைய   விலைவாசியில் 11 ரூபாயும் 20 ரூபாயும் வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? அரசு டாசுமாக்கில் நாள் ஒன்றுக்கு எவ்வளவு இலாபம் ஈட்டுகிறது? என்பதை வைத்துக்கொண்டு வளர்ச்சி குறித்து  தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள்தான் இந்தப் புள்ளிவிவரப் புலிகள்.
    உதயகுமார் யார்? நம்மைப்  போன்ற சாதாரணமானவர். போராட்டத்தை ஒருங்கிணைத்து தலைமையேற்று நடத்திக்கொண் டிருக்கிறார் என்பதைத் தவிர வேறு எந்த ஆட்சி அதிகாரமோ இல்லாதவர்.
அவர் மீது அமெரிக்க பணப்பரிவர்த்தனைக்  குற்றச்சாட்டு மட்டுமல்ல, எந்தக்  குற்றச்சாட்டையும் சுமத்தலாம். அதில் உண்மை  இருப்பதாகவும், ஆதாரம் இருப்பதாகவும் நிரூபிக்கலாம்.  ஏனென்றால் அவர்கள் ஆட்சியில் இருப்பவர்கள். நாம் அடிமட்டத்தில் இருப்பவர்கள். போராடுபவர்கள்மீது முதலில் மறைமுக அடக்கு முறையைக்  கையாள்வது, திமிரி எழுந்தால் அவன்மீது இதுபோன்ற குற்றச்சாட்டுக் களைச் சுமத்தி சமுதாயத்தின் பார்வையில் குற்றவாளியாகக் காட்டி அவர் மீது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி அதன் காரணமாக மக்களிட மிருந்து, தனிமைப்படுத்தி போராட்டத்தை நீர்த்துப்போகச்  செய்யும் முதலாளித்துவச் சூழ்ச்சிதான் இது.
    எப்போது ஒருவன் இந்த சமுதாயத்துக்காகத்  தன்னை முழு மையாக அர்ப்பணித்துக்கொள்ள முடிவெடுத்து விட்டானோ அப்போதே அவன் மீதுதேசத்துரோகி, ஊரைக்கெடுப்பவன், கலகம் விளைவிப்பவன், பைத்தியக்காரன் என்று பட்டம் கட்டி, அதை உண்மை என இந்த மக்களை நம்பவைத்து அவர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடுவார்கள். அதில்தான் இந்த முதலாளித்துவ ஏகாதிபத்தியக் கூட்டணிகளின் வெற்றியே அடங்கியிருக்கிறது.
    கூடங்குளத்தில் அணு உலைத்திட்டம் துவங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. 25 ஆண்டுகாலம் இவர்கள் என்ன செய்து கொண்டிருந் தார்கள்?  இந்தப் போராட்டக்காரர்கள் எங்கே போனார்கள்?  என்று  கேட்கிறார்களே! 25 ஆண்டுகாலமாக போராட்டமே நடக்கவில்லையா? 25 ஆண்டுகாலம்  போராட்டம் நடக்கவில்லை என்று சொன்னால் அதன் கட்டுமானப் பணிகள் முடிவதற்கு 25 ஆண்டுகாலம் ஆனதா? இதிலிருந்தே தெரியவில்லையா, 25 ஆண்டு காலமாகத்  தொடர்  போராட்டங்கள் நடந்ததால்தான் அணுஉலை அமைப்பதில் இத்தனை ஆண்டுகாலம் தள்ளிப்போனது என்று.
    1986 இல் பாராளுமன்றத்தில் கூடங்குளத்தில் அணுஉலை அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டபோது ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்பு.
    எதிர்ப்பின் காரணமாக அடிக்கல் நாட்டு விழா மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டது.
    அணு உலைக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்க நடப்பட்டிருந்த எல்லைக்கற்கள் போராட்டக்காரர்களால் பிடுங்கி எறியப்பட்டன.
    1986 இல் தினமணியில் அணு உலை பாதிப்பு குறித்து டி.என்.கோபாலனின் விரிவான கட்டுரை வெளிவந்தது.
    1987 திருச்செந்தூரில் மீனவ கிராமங்களின் தலைவர்களின் கண்டனக்கூட்டம்.
    1987 செப்டம்பர் 22 கூடங்குளம் அணு உலையை எதிர்த்து இடிந்தகரையில் மாபெரும் பொதுக்கூட்டம்.
    1988 அணு உலையை எதிர்த்து நெல்லையில் ஊர்வலம்.
    1989 நாகர்கோயிலில் ஊர்வலம்.
    1989 மார்சு 20 தூத்துக்குடியில் ஊர்வலம்.
    1989 சூனியர் விகடனில் அணு உலை ஆபத்து குறித்து நாகார்ச்சுனனின் கட்டுரை.
    1988 பாராளுமன்றத்தில் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கண்டன உரை.
    இதே ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்த சோவியத் அதிபர் கோர்ப்பச்சேவுக்கு டெல்லியிலும் மும்பையிலும் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்ட முயற்சி.
    1989 மே 1 ல் தேசிய மீனவர் கூட்டமைப்பு தாமாசு கோச்சேரி யின் தலைமையில் கன்னியாகுமரியில் மாபெரும் கண்டனப் பேரணி; காவல்துறையின் துப்பாக்கிச்சூடு. அதே ஆண்டு போராட்டம் பற்றிய ஆவணப்படம் வெளியிடல்.
    1989 சூன் 13 வரை  குமாரதாசு தலைமையில் நெல்லையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அணு உலை ஆபத்துக் குறித்து வீதி நாடகங்கள்.
    1989 சூன் 13 இல் கூடங்குளத்தில் கண்டனப் பொதுக்கூட்டம்.
    இதையல்லாமல் 1989 ல் நாகர்கோயில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 101 தொடர் பொதுக்கூட்டங்கள்.
    தினமணியில் “கொல்லவரும் கூடங்குளம் ”என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள். அதன்  அடிப்படையில் இவ்வளவு ஆபத்துகள் நிறைந்த இத்திட்டத்தை ஒருபோதும்   ஒப்புக்கொள்ள முடியாது என்று, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அறிவித்தார் .
    இது முழுமையான  தகவல் அல்ல;  இப்படி கூடங்குளத்தில்  அணு உலை  துவங்கப்பட்ட  காலத்திலிருந்து  இன்றுவரை தொடர் போராட்டங்கள்   நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அது செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் திட்டமிட்டு திரைபோட்டு மறைக்கப்பட்டது. இன்று தமிழகம் முழுவதும் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறுவதால் தவிர்க்க முடியாமல் செய்தி வெளியிடுகிறார்கள் .  கூடங்குளத்தில் நிறுவப்படும் அணு உலையால் எந்த ஆபத்தும் இல்லை;  உதயகுமாரோ மற்றவர்களோ சொல்வதில் எந்த உண்மையும் இல்லை;  இதனால்  நமக்குத் தடையில்லா  மின்சாரம் கிடைக்கும்;   தொழிற்சாலைகள்  பெருகும்;  வேலைவாய்ப்புகள் பெருகும்; நம்முடைய பொருளாதாரம் உயரும் என்று நினைத்தால், உதயகுமார் கூப்பிடுகிறார் என்பதற்காகவோ வேலை செய்யாமல் பிரியாணி பொட்டலமும் காசும் கொடுக்கிறார்கள (குற்றச்சாட்டு)                                                                                                                                                       என்பதற்காகவோ அந்த மக்கள் வீதிக்கு வந்து போராடுவார்களா? காசு கொடுத்து ஆட்களைத் திரட்டுவது ஓட்டுப் பொறுக்கும் காங்கிரசு போன்ற கட்சிகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். கூடங்குளம் மக்களின் போராட்டத்துக்குப்  பொருந்தாது.
    இன்றைக்கு மின்சாரம் என்பது தவிர்க்க முடியாத அத்தியாவசியமான ஒன்றுதான்.  தடையில்லா மின்சாரம் கேட்கலாம் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் கூடங்குளம் தான் வேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை. தடை யில்லா மின்சாரம் கேட்பவர்கள் நெய்வேலியில் உற்பத்தியாகிற ஒட்டு மொத்த மின்சாரமும் இங்குள்ள குடிமக்களின் பயன்பாட்டுக்கும் விவசாயத் துக்கும் சிறு குறு தொழிற்சாலைகளுக்கும் இங்குள்ள வர்த்தக நிறுவனங் களுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் பயன்படுத்தியதுபோக எஞ்சியி ருந்தால் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அண்டை மாநிலங் களுக்கும் வழங்குங்கள் என்று முழங்குங்கள். அதை விடுத்து கூடங்குளம் தான் வேண்டும் என்பவர்கள் கூடங்குளத்தில் குடியிருக்கத் தயாரா? அங்கே தனது மனைவி மக்களையும் அழைத்துச் சென்று குடும்பம் நடத்தத் தயாரா?
    25 ஆண்டு காலமாக நடக்கும் ஒரு மக்கள் போராட்டத்தை அந்த மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அடக்கி ஒடுக்கி நசுக்க நினைப்பதும் அந்த மக்களின் உணர்வுகளுக்கு விரோதமாக அடாவடித்தனமாக ஆணவப் போக் குடன், அந்த மக்களைப்பற்றிக்  கொஞ்சமும் கவçயில்லாமல் அங்கே அணுஉலை அமைத்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தால், இதை ஒரு காட்டுத்தர்பார் எனச் சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?
    இந்தத்  தெற்காசியப் பிராந்தியத்திலே அமெரிக்காவுக்காகத் தரகு வேலை செய்ய மன்மோகன்சிங் காங்கிரசு தளபதியார்களைவிட வேறு எவராவது இருக்க முடியுமா?

(நாளைவிடியும்   சூலை - திசம்பர் 2013 இதழில் இடம்பெற்ற கட்டுரை)